இலங்கையில் தனி ஈழம் அமைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி கைது


இலங்கையில் தனி ஈழம் அமைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 15 Feb 2018 4:30 AM IST (Updated: 15 Feb 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் தனி ஈழம் அமைய வலியுறுத்தி சீர்காழி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிராஜநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 45). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர், நேற்று மணலகரம் காப்பியக்குடி செல்லும் சாலையில் உள்ள அரசூர் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு தமிழ் வாழ்க..., இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தமிழ் பெயர்களை அழிக்கக் கூடாது. அனைத்து இடங்களிலும் தமிழ் பெயர் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். அவர் செல்போன் கோபுரத்தில் ஏறியதையும், அங்கிருந்து கோஷம் எழுப்பியதையும் பார்த்த அந்த பகுதி மக்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அவரது குடும்பத்தினர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கும்படி அவரிடம் கூறினர். ஆனால், ரமேஷ் கீழே இறங்க மறுத்து விட்டார்.

பின்னர் அந்த பகுதி பொதுமக்கள், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கும், கொள்ளிடம் போலீஸ் நிலையம் மற்றும் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் கோபுரத்தில் இருந்த ரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ரமேஷ், செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் தனி ஈழம் அமைய வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story