மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் டி.டி.வி.தினகரன் பேட்டி


மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2018 4:45 AM IST (Updated: 15 Feb 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தஞ்சாவூர்,

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தாய்மார்களும், இளைஞர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளும் ஆர்.கே.நகர் தொகுதியை போல் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. வரும் தேர்தல் இதை உங்களுக்கு உணர்த்தும். அடுத்த கட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது. இதனால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநிலத்தில் அரசு இருப்பதாகவே மக்கள் நினைக்கவில்லை. தமிழகம் பெரியார் பூமி என்று இன்றைக்கு தான் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஞாபகம் வந்து இருக்கிறதா? பா.ஜனதாவின் ஆலோசனையை கேட்டு சசிகலாவை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.

அமைச்சரவை கூட்டம் கூடுவதை பற்றி கேட்கிறீர்கள். அது கமிஷன் மண்டி. கமிஷன் விவரத்தை பற்றி பேசுவார்கள். சிறையில் மவுன விரதத்தை முடித்து கொண்ட சசிகலாவை வருகிற 17-ந் தேதி நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க போவதாக அவரை சந்தித்து ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். இப்போது முடிந்து விட்டது. மீண்டும் அவரை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், சுப்ரீம் கோர்ட்டு விசாரணை பற்றியும் பேச இருக்கிறேன்.

ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தும் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள், ஓ.என்.ஜி.சி. பணிக்கு தடை விதித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மத்திய அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் கண்டு கொள்வதில்லை.

நாங்கள் மத்திய அரசின் கைக்கூலி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். அப்படியென்றால் ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்த வேண்டியது தானே?. ஓ.என்.ஜி.சி. பணியை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை ஏதோ மறைந்த முன்னாள் கவுன்சிலர், முன்னாள் மேயர் படத்தை திறப்பது போல் திறந்து விட்டு வீர செயல் செய்ததைபோல் பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story