‘வாட்ஸ்-அப்’ மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி, 3 பேர் கைது


‘வாட்ஸ்-அப்’ மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி, 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2018 3:30 AM IST (Updated: 15 Feb 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கி தருவதாக ‘வாட்ஸ்-அப்‘ மூலம் தகவல் அனுப்பி மதுரை என்ஜினீயரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை மகால் பந்தடி 3-வது தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன் மகன் விஷ்ணுகுமார்(வயது 22), என்ஜினீயர். இவர் ‘ஜாப் வெல்பேர்‘ என்ற ‘வாட்ஸ்-அப்‘ குரூப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த குரூப்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்தது. அதில் தெரிவித்து இருந்த தொலைபேசி எண்ணில் விஷ்ணுகுமார் வேலை குறித்து தொடர்பு கொண்டார்.

அதில் வேலை உறுதியாக இருப்பதாகவும், அதற்கு ரூ.90 ஆயிரம் முன்பதிவு தொகையாக கட்ட வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் விஷ்ணுகுமாரை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த வேலைக்கான நியமன ஆணையை அனுப்பி உள்ளனர்.

இதனை நம்பி விஷ்ணுகுமார் ரூ.90 ஆயிரத்தை வெங்கேடசன் என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் அவர் வேலைக்கான நியமன ஆணையை எடுத்து கொண்டு அதில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு சென்று பார்த்தார். அங்கு அதுபோன்ற கம்பெனி எதுவும் இல்லை.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் குறித்து மதுரை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், ‘வாட்ஸ்-அப்‘ மூலம் பணமோசடி செய்த விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த அம்பேத்குமார்ராஜ்குமார்(29), வெங்கடேஷ்(29), அரக்கோணம் பரவத்தூரை சேர்ந்த சுஜிதா(29) ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்கள் தான் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் ‘வாட்ஸ்-அப்‘ மூலம் போலியான தகவல்களை பரப்பினர் என்றும், விஷ்ணுகுமாரிடம் ரூ.90 ஆயிரத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

அதை தொடர்ந்து பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மடிக்கணினி, செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story