10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்


10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:15 AM IST (Updated: 15 Feb 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாமல் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாய நிலையில் உள்ளது. பயிரை காப்பாற்ற விவசாயிகள் டேங்கர் மூலம் தண்ணீர் வாங்கி வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

வாய்மேடு,

தலைஞாயிறு ஒன்றியம் மகாராஜபுரம், மேல்பாதி, கீழ்பாதி, வேதாரண்யம் ஒன்றியம் வாய்மேடு, தாணிக்கோட்டகம், வெள்ளிக்கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரையும், வடகிழக்கு பருவமழையையும் நம்பியே குறுவை, சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் சரிவர கிடைக்காததால் குறுவை சாகுபடி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கானல் நீராகவே போய்விட்டது. வடகிழக்கு பருவமழையை நம்பி தொடங்கும் சம்பா சாகுபடியும் வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் கால தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் குறுவை சாகுபடி பொய்த்து போனது. அதைதொடர்ந்து காலதாமதமாக திறந்துவிடப்பட்ட தண்ணீரை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். பயிர்கள் முளைத்து வந்த நிலையில் பருவமழை தொடங்கி வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது. அதைதொடர்ந்து விவசாயிகள் மீண்டும் பயிர் செய்தனர். மீண்டும் மழை பெய்ததால் அந்த பயிரும் சேதமடைந்தது. அதேபோல் இந்த ஆண்டு ஒருபோக சாகுபடியை மட்டும் விவசாயிகள் 2, 3 முறை செய்துள்ளனர்.

டேங்கரில் தண்ணீர்

இந்த நிலையில் தற்போது விவசாயிகள் மேற்கொண்டிருந்த சம்பா பயிர்கள் கதிர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போய்விட்டது. இதனால் வயல்கள் வறண்டு காணப்படுகிறது. கதிர் வரும் பருவத்தில் தண்ணீர் இல்லாததால் வரும் கதிர்கள் அனைத்தும் பதர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் தங்களது வயல்களில் கதிர் வந்துள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக டேங்கர் மூலம் தண்ணீர் வாங்கி வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story