வேடசந்தூர் பகுதிகளில் புகையிலை விளைச்சல் அமோகம்


வேடசந்தூர் பகுதிகளில் புகையிலை விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:00 AM IST (Updated: 15 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதிகளில் புகையிலை அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது.

வேடசந்தூர்

வேடசந்தூர் தாலுகா பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. இந்த பகுதிகளில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்தது. இருப்பினும் குளங்கள், முழுமையாக நிரம்பவில்லை. இதனால் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் புகையிலை பயிரை, சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கருக்காம்பட்டி, தோப்புப்பட்டி, சேணன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, அழகாபுரி, லட்சுமணம்பட்டி, நால்ரோடு, நவாமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த பகுதிகளில் தான் புகையிலை அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாகுபடி செலவு, தண்ணீர் தேவை குறைவு என்பதே விவசாயிகளின் ஆர்வத்துக்கு காரணம் ஆகும்.

இந்தியாவில் மத்திய அரசின் புகையிலை ஆராய்ச்சி நிலையம் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அதன் கிளை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது. இங்கு புகையிலை சாகுபடி செய்வதற்காக விதை மற்றும் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

ஒரு கிலோ விதை ரூ.1,200-க்கு கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்தால் போதும். 110 நாட்களில் புகையிலை அறுவடை செய்து விடலாம். புகையிலை நன்றாக இருந்தால் விலையும் அதிகமாக கிடைக்கும். அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் விலை இல்லாத நேரத்தில் புகையிலையை அறுவடை செய்து, பதப்படுத்தி வைத்து, பின்னர் விலை உயரும் போது விற்பனை செய்து விடலாம். தற்போது வேடசந்தூர் பகுதிகளில் சாகுபடி செய்த புகையிலை நன்கு விளைச்சல் அடைந்துள்ளது.

வேடசந்தூரில் உள்ள மத்திய அரசின் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில், புகையிலை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் புகையிலையை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதில்லை. ஆனால் ஆந்திரா மாநிலத்தில் புகையிலையை அரசே நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் புகையிலையை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தால் அரசுக்கு வருமானம் கிடைப்பது மட்டுமின்றி விவசாயிகள் வாழ்வும் மலரும்.

Next Story