சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து அ.தி.மு.க. அரசு நீங்காத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது - சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றச்சாட்டு


சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து அ.தி.மு.க. அரசு நீங்காத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது - சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Feb 2018 3:45 AM IST (Updated: 15 Feb 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துநீங்காத களங்கத்தை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தி விட்டது என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றம்சாட்டினார்.

கோவை,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்நிலைத் திடலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க. துணைசெயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியு மான சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் இந்தியை எதிர்த்து பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நம் மீது இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய பா.ஜனதா அரசு மீண்டும் ஈடுபட்டு வருகிறது. ஒரு மாநிலத்தை ஆளுகிற அரசுக்கு அந்த மாநில மக்களை, மொழியை காக்கிற கடமை உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட்ட போது மத்திய, மாநில அரசுகளுக்கு தனித் தனி அதிகாரங்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு எல்லா அதிகாரங்களும் மத்தியில் குவியக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிலைமை வரும் என்று கருதித் தான் மாநிலத்துக்கு சில அதிகாரங்கள் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்று குரல் கொடுத்தார்.

ஆனால் தற்போது கல்வித்துறையில் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ கல்வியில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்ற அகில இந்திய நுழைவு தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அத்தனை தீர்மானங்களும், சட்டங்களும் வரலாற்று சிறப்புமிக்கவை. ஆனால் அத்தகைய புகழ் பெற்ற சட்டமன்றத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்காத களங்கத்தை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தி விட்டது.

கோவை பாரதியார் பல் கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இப்படி அலங்கோலமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை அகற்றும் நேரம் வந்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story