குழந்தையை பள்ளியில் விட்டுவந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி


குழந்தையை பள்ளியில் விட்டுவந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 15 Feb 2018 3:15 AM IST (Updated: 15 Feb 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

வடவள்ளியில், குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டு திரும்பியபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம் பெண் ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

வடவள்ளி,

கோவையை அடுத்த வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 43). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சவிதா (40). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சவிதா, தனது குழந்தையை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விட மொபட்டில் அழைத்து சென்றார். பின்னர், பள்ளியில் குழந்தையை விட்டுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.

வடவள்ளி காட்டுவிநாயகர் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை, இடதுபுறமாக முந்தி செல்ல சவிதா முயன்றார்.

தண்ணீர் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் திடீரென இடதுபுறமாக திருப்பியதாக தெரிகிறது. இதில் நிலைத்தடுமாறிய சவிதா மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவர் அணிந்து இருந்த ஹெல்மெட் கழன்று ஓடியது. அப்போது லாரியின் பின்சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பீதி அடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கல்வீரம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (38) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- விபத்து நடைபெற்ற இடம் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். மேலும், இங்கு அரசு பள்ளி உள்ளதால் மாணவ- மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. முல்லை நகரில் இருந்து வடவள்ளி பஸ்நிலையம் வரையுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.

காட்டு விநாயகர் கோவில் அருகே 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சிக்னல் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு போலீஸ்காரர் ஒருவரை போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்கு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story