முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் உடலில் விஷம் கலந்துள்ளது பிரேத பரிசோதனையில் தகவல்


முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் உடலில் விஷம் கலந்துள்ளது பிரேத பரிசோதனையில் தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:30 AM IST (Updated: 15 Feb 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் உடல் அடக்கம் நேற்று நடந்தது. இந்த நிலையில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளம் அருகே உள்ள படுவூரை சேர்ந்தவர் ஜான் ஜேக்கப் (வயது 65). கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் குமரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருடைய மனைவி நிர்மலதா. மகன் நிதின் சைமன். மகள் வெர்ஜின்ரோஸ். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப், படுவூரில் உள்ள வீட்டில் மனைவி நிர்மலதா மற்றும் அவருடைய தாயாருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது ஜான் ஜேக்கப் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் இறந்த தகவல் கருங்கல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ஜான்ஜேக்கப் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு நேற்று காலை 10 அளவில் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரான படுவூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

ஜி.கே.வாசன் அஞ்சலி

அங்கு அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜான் ஜேக்கப் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்தும், கட்சி கொடியை போர்த்தியும் அஞ்சலி செலுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, குமாரதாஸ் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலிசெலுத்தினர்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதில், சகாயநகர் சதாசகாய அன்னை ஆலயத்தில் நடந்த கூட்டுத்திருப்பலிக்கு பின்னர், ஜான் ஜேக்கப்பின் உடல் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உடலில் விஷம்

ஜான்ஜேக்கப் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

‘ஜான்ஜேக்கப் மரணம் குறித்து அவருடைய மகன் நிதின் சைமன் கொடுத்த புகாரின்பேரில் கருங்கல் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதன்படி, இன்று(அதாவது நேற்று) அவரின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. இதில் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி ஜான்ஜேக்கப் உடலில் விஷம் கலந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவு

அதை உறுதி படுத்துவதற்காகவும், எந்தவகையான விஷம் அவரின் உடலில் கலந்துள்ளது என்பதை கண்டறிவதற்காகவும் ஜான்ஜேக்கப் வயிறு பகுதியில் உள்ள உடற்பாகங்கள் எடுக்கப்பட்டு ரசாயன ஆய்வுக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வர ஒருசில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே அவரின் உடலில் எம்மாதிரியான விஷம் கலந்திருந்தது. எப்படி இறந்தார்? என்ற முழு விவரமும் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story