நடிகை குஷ்பு வழக்கில் போலீஸ் அதிகாரி சாட்சியம் விசாரணை 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


நடிகை குஷ்பு வழக்கில் போலீஸ் அதிகாரி சாட்சியம் விசாரணை 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 15 Feb 2018 4:15 AM IST (Updated: 15 Feb 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வருகிற 19-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு ராஜா உத்தரவிட்டார்.

மேட்டூர்,

நடிகை குஷ்பு கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். பின்னர் கோர்ட்டில் இருந்து அவர் திரும்பி செல்லும் போது, அவரது கார் மீது ஒரு கும்பல் அழுகிய தக்காளி, முட்டை ஆகியவற்றை வீசியது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மேட்டூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு சாட்சி விசாரணைகள் முடிவுற்ற நிலையில், போலீஸ் விசாரணை அதிகாரியான அப்போதைய மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போது துணை போலீஸ் சூப்பிரண்டுமான தினகரன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் மட்டும் சாட்சியம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மேட்டூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மேட்டூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரை எதிர்தரப்பு வக்கீல்கள் முருகன், சதாசிவம், பிரபாகரன் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். போலீஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், இந்த வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ராஜா தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதேநேரத்தில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை குஷ்புவுக்கு கோர்ட்டு மூலம் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால், வருகிற 19-ந் தேதி இந்த வழக்கு மேட்டூர் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது அவர் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story