குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்


குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 15 Feb 2018 11:25 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் அனைத்து விசைப்படகுகளையும் பதிவு செய்யக்கோரி மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இந்த மீனவர்கள் ஆழ்கடல் சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை குளச்சல் மீன்பிடி பயிற்சி நிலைய துணை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால்,  விசைப்படகுகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய அலுவலர்கள் மறுப்பதாகவும், அனைத்து விசைப்படகுகளையும் பதிவு செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஏலக்கூடம் வெறிச்சோடியது

இதனால், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நேற்று காலை ஏராளமான விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு  இருந்தன. மேலும், ஏற்கனவே, கரைக்கு திரும்பிய விசைப்படகுகளில் இருந்து மீன்கள் துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அங்கு மீன் ஏலம் நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே குமரி மாவட்ட விசைப்படகு மீன்பிடி நலச்சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் பர்னபாஸ் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் பிராங்கிளின், துணைத்தலைவர் வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனைத்து விசைப்படகுகளையும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story