அந்தியூர் அருகே தோட்டங்களில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


அந்தியூர் அருகே தோட்டங்களில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:45 AM IST (Updated: 16 Feb 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தோட்டங்களில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பர்கூர் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை வெளியேறியது. இந்த யானை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சின்னப்பன் என்பவரது நெல் வயலில் புகுந்தது. பின்னர் நெல் பயிரை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது.

சத்தம் கேட்டு தோட்டத்தின் அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன் திடுக்கிட்டு எழுந்தார். உடனே தோட்டத்துக்கு ஓடிச்சென்று பார்த்தார். அங்கு யானை நின்று கொண்டு பயிரை நாசப்படுத்தி கொண்டு இருந்தது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு திரண்டனர். பின்னர் தீப்பந்தம் கொளுத்தி யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள். இதில் ஆவேசமடைந்த யானை விவசாயிகளை விரட்டியது. இதனால் அவர்கள் பயந்து ஓடினார்கள். நெல் பயிரை நாசப்படுத்திய யானை அருகே உள்ள அவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. வாழைகளையும் சேதப்படுத்தியது.

பின்னர் சோமு, பழனிசாமி ஆகிய விவசாயிகளின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்தது. அதைத்தொடர்ந்து அருகே உள்ள சேமலை என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தது. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது.

இதுபற்றி விவசாயிகள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள். ஆனால் விடிய விடிய யானை அந்தப்பகுதி விவசாய தோட்டங்களிலேயே சுற்றித்திரிந்து போக்கு காட்டியது. நேற்று காலை 6 மணி அளவில் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டார்கள்.

Next Story