திருச்சி விமான நிலையத்தில் ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 16 Feb 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தஞ்சை, நன்னிலத்தை சேர்ந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது.

அதில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, உடற்பயிற்சி செய்ய பயன்படும் மசாஜ் கருவியின் உள்ளே வளையம் போல் தங்கத்தை செய்து மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 350 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த இளையராஜா என்பது தெரியவந்தது.

இந்நிலையில் அதே விமானத்தில் வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த மிஸ்பாதின் என்பவர் உடைமையில் மறைத்து கடத்தி வந்த 350 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு மொத்தம் ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக இளையராஜா, மிஸ்பாதின் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story