ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி இடைத்தரகருடன் கைது


ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி இடைத்தரகருடன் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 3:00 AM IST (Updated: 16 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் கிராம நிர்வாக அதிகாரியும் இடைத்தரகரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

தூத்துக்குடியை சேர்ந்தவர் சேர்மக்கனி (வயது 48). இவர் விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அருப்புக்கோட்டையில் தங்கி இருந்து தினசரி அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்.

பாலவநத்தம் அருகில் உள்ள மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் (60) என்பவர் சேர்மக்கனி அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பாலவநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான சேவையை பெறுவதற்கு இடைத்தரகர் ஜெயபிரகாஷ் மூலம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இந்தநிலையில் பாலவநத்தத்தை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவர் தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றத்துக்காக பாலவநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என இடைத்தரகர் ஜெயபிரகாஷ் மூலம் கிராம நிர்வாக அதிகாரி சேர்மக்கனி கேட்டுள்ளார். கிருஷ்ணன் இதற்கு தயக்கம் காட்டவே இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாறுதலுக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கிருஷ்ணன் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் நேற்று கிருஷ்ணன், பாலவநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார்.அப்போது அந்த அலுவலகத்துக்கு வெளியே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், இன்ஸ்பெக்டர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் விரைந்து சென்று ஜெயபிரகாசிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்ததுடன், அவரை பிடித்தனர்.

அலுவலகத்தில் இருந்த சேர்மக்கனியிடமும் விசாரணை நடத்தியதில் ஜெய பிரகாஷ் மூலம் தான் கிராம நிர்வாக அதிகாரி சேர்மக்கனி லஞ்ச பணத்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது. அதன் பேரில் சேர்மக் கனியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Next Story