173 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


173 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2018 5:30 AM IST (Updated: 16 Feb 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போத்தனூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி.இ. ஆட்டோமொபைல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரேம்குமார் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு விடுதிக்கு வந்தார்.

மாலையில் கல்லூரி முடிந்து விடுதிக்கு சென்ற சக மாணவர்கள் பிரேம்குமார் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு அவருடைய அறை கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் அவர்கள் கதவை தட்டினர். ஆனால் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள மின் விசிறியில் பிரேம்குமார் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார் தற்கொலை செய்த விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது விடுதியில் இருந்த பிரேம்குமார் செல்போனை கைப்பற்றி விசாரித்தனர். அவர் தனது செல்போனில் இருந்து ‘சாரி பார் திஸ்’ (எனது இந்த முடிவுக்கு மன்னிக்கவும்) என்று தனது சக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 173 பேருக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளார்.மேலும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? என்றும், தூக்குப்போட்டு தற்கொலை செய்வது எப்படி? என்றும் யூ டியூப்பில் பார்த்துள்ளார். பின்னர் அவர் விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை பிரேம்குமார் படித்த கல்லூரியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் பிரேம்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் சாவுக்கு உரிய விசாரணை நடத்த கோரியும் அவருடைய உடலை வாங்க மறுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்துசென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாணவர் சாவுக்கு உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் பிரேம்குமாரின் உடலை பெற்றுக்கொண்டு கலைந்துசென்றனர். தொடர்ந்து பிரேம்குமாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சூளகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story