பெரம்பலூரில் ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


பெரம்பலூரில் ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 3:45 AM IST (Updated: 16 Feb 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூரில் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருநகர் அங்காளம்மன் கோவில் அருகே ரவுடி பன்னீர் செல்வம் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த வினோத், கபிலன் (22), அவரது நண்பர் கும்பகோணம் மேலதெருவை சேர்ந்த விக்னேஷ் (23) மற்றும் துறைமங்கலம் இலங்கை அகதிகள் முகாம் தலைவர் சற்குணராஜா மகன் நகுலேஷ்வரன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் துறைமங்கலத்தை ஏசுதாசை (23) நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒருவர் கைது

மது அருந்திய போது ஏற்பட்ட முன்விரோத தகராறில் வினோத் உள்ளிட்டோரை பன்னீர்செல்வம் மிரட்டி வந்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் வினோத் உள்பட 5 பேர் சேர்ந்து பன்னீர்செல்வத்தை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தின் போது பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியை சேர்ந்த மணிகண்டன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது வினோத் உள்ளிட்டோர் சுற்றி வளைத்ததும் மணிகண்டன் தப்பிவிட்டார். இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்கிற சந்தேகத்தில் போலீசார் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்காளம்மன் கோவில் அருகே பன்னீர்செல்வம் இருந்ததை எப்படி அறிந்து கொண்டு வந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தினர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

பஸ்கள் மீது கல்வீச்சு

இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் பன்னீர்செல்வத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மாலை பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் அருகே சென்று அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கி உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் வந்து பஸ் மீது கல்வீசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story