ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாலுகா குழு உறுப்பினர்கள் ராசு, அசோகன், முன்னாள் ஊராட்சி தலைவர் மரியஅருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் சேதுராமு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் நாகநாதன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25,000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். 2016-17-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காமல் விடுபட்டுபோன அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் 100 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகையை வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சந்தானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா துணை செயலாளர் பூபாலன், துணை தலைவர் ராமநாதன், பொருளாளர் போஸ், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பால்ராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் சோனைமுத்து, முத்தையா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story