பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 16 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார்.

முன்னதாக திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளை தமிழக முதல்-அமைச்சர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 450 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story