ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி தொழில் அதிபர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதியதில் தூத்துக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் உயிர் இழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தூத்துக்குடி, துறைமுக கழக குடியிருப்பில் குடியிருந்து வந்தவர் நவின் ஜோசப் (வயது28). இவர் கட்டுமான தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி அகிலா (25). இவர் வண்ண மீன்கள் விற்பனையகம் வைத்துள்ளார். இவர்களுக்கு சாரக் என்ற 7 மாத குழந்தை உள்ளது.
அகிலாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டியாகும்.
நவின் ஜோசப் தான் புதிதாக வாங்கிய காரில் சென்னை சென்றிருந்தார். அங்கிருந்து சொக்கம்பட்டியில் இருக்கும் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க காரில் புறப்பட்டுள்ளார். காரை சொக்கம்பட்டியைச் சேர்ந்த அவரது உறவினர் முகேஸ் (23) என்பவர் ஓட்டி வந்தார்.
மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரி போலீஸ் சோதனைச் சாவடி அருகே வரும்போது, சாலை ஓரம் இருந்த எச்சரிக்கை பலகை மற்றும் மரத்தின் மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த நவின் ஜோசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த முகேஸ் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story