கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 185 பேர் கைது
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 185 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் கன்னியப்பன், பரமேஸ்வரி, இணை செயலாளர்கள் சந்திரசேகரன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அருள்டேனியல், மாநில தணிக்கையாளர் காந்திமதிநாதன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மறியல் போராட்டம்
இதில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்காணல் நடத்திய சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி வரும் மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 140 பெண்கள் உள்பட 185 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
Related Tags :
Next Story