கூட்டுறவு சங்க பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபர்


கூட்டுறவு சங்க பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபர்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:15 AM IST (Updated: 16 Feb 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே பஸ்சுக்காக காத்திருந்த கூட்டுறவு சங்க பெண் ஊழியரிடம் தங்க நகையை பறித்துவிட்டு ஓடிய வாலிபரை, போலீசார் மற்றும் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர், ஒரு தனியார் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முருகேஸ்வரி (வயது 35). இவர், அபிராமி கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று பணி முடிந்ததும் இவர், கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக, அரசு மருத்துவமனை அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு ஏராளமான பயணிகளும் நின்றிருந்தனர். முருகேஸ்வரியின் அருகில் வாலிபர் ஒருவர் நின்றார். திடீரென அவர், முருகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட முருகேஸ்வரி நகையை பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டார்.

அவர் நகையை நன்றாக பிடித்துக்கொண்டதால் பாதி சங்கிலி மட்டும் அந்த வாலிபரின் கையில் சிக்கிக்கொண்டது. அந்த நகையை பறித்த வாலிபர் திண்டுக்கல் பஸ் நிலையம் நோக்கி தப்பி ஓடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை விரட்டி சென்றனர். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகான் ரத்னாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், ஜான்பீட்டர் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் சேர்ந்து அவரை விரட்டினர்.

தப்பி ஓடிய வாலிபர், திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குள் சென்றார். அதற்குள் அங்கு சென்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அந்த நபரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த அருள்முருகன் மகன் கணேஷ்குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேஷ் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையையும் மீட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பெண்ணிடம் வாலிபர் ஒருவர் நகை பறித்து ஓடிய சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story