திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:45 AM IST (Updated: 17 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

திருச்சி,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மின்வாரியத்தில் உள்ள 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பிப்ரவரி 16-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி சி.ஐ.டி.யு, பி.எம்.எஸ், என்.எல்.ஓ, டி.என்.பி.இ.ஓ. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நேற்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மின் கட்டண வசூல் மையங்களிலும் ஊழியர்கள் இல்லை. இதனால் அங்கு வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் தேவராஜ், சங்க நிர்வாகிகள் இருதயராஜ், பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

திருச்சி கிழக்கு, திருச்சி பொது, ஸ்ரீரங்கம், துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய 7 மின்வாரிய கோட்டங்களிலும் சுமார் 1800 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story