ஊதிய உயர்வு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 Feb 2018 2:30 AM IST (Updated: 17 Feb 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தம்

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.), பாரதிய மின்ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 10 மின்வாரிய தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிப்பு இல்லை

அதே நேரத்தில் மற்ற சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்து இருந்தனர். இதனால் மின்சார கட்டணம் செலுத்தும் மையங்களில் வழக்கம்போல் பணிகள் நடந்தன. பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தியதால் பாதிப்புகள் எதுவும் இல்லை.

இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மின்வாரியத்தில் 1,986 ஊழியர்கள் உள்ளனர். இதில் சி.ஐ.டி.யு. உள்பட 10 சங்கங்களை சேர்ந்த 936 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ஒயர் பழுது ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடவில்லை என்று கூறினார்.

கோவில்பட்டியில்...

கோவில்பட்டி கோட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் 384 பேரில் 67 பேர் பணிக்கு வரவில்லை. இதேபோல் திருச்செந்தூர் கோட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் 300 பேரில் 136 பேர் பணிக்கு வரவில்லை. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்ததால், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்றது.

Next Story