செங்கோட்டை அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை


செங்கோட்டை அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Feb 2018 2:00 AM IST (Updated: 17 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன சோதனை

தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவிற்கு அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சிகள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், ரேஷன் அரிசியையும் கேரளாவிற்கு கடத்தி செல்கின்றனர்.

இந்த கடத்தலை தடுப்பதற்காக, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வழியான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, புகையிலை பொருட்களை கடத்தும் நபர்களை கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ரேஷன் அரிசி பறிமுதல்


இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவில் புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசுவரி மற்றும் போலீசார் புதூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு கார் போலீசாரை கண்டதும், திடீரென காட்டு பகுதிக்குள் திருப்பி செலுத்தப்பட்டது. உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். இதனால், அந்த காரில் இருந்த 3 பேர் அந்த காட்டு பகுதிக்குள் காரை நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டனர். போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில், கேரளாவுக்கு கடத்துவதற்காக மூட்டைகளில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரின் பதிவு எண்ணை வைத்து, அந்த கார் யாருடையது? தப்பியோடிய 3 பேர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story