சிவகங்கையில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


சிவகங்கையில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 17 Feb 2018 4:15 AM IST (Updated: 17 Feb 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ஒரே நாளில் 5 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500-ஐ மர்ம கும்பல் திருடி சென்றது.

சிவகங்கை,

சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் அதிக அளவில் கடைகள் உள்ளன. இந்தநிலையில் இங்குள்ள இரண்டு அரிசி கடைகளை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அடைத்துவிட்டு அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். கடைகள் அடைக்கப்பட்டதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சிலர் நள்ளிரவில் அரிசி கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் ஒரு கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் மற்றொரு கடையில் இருந்த ரூ.12 ஆயிரத்து 500 ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதைதொடர்ந்து சிவகங்கை பஸ் நிலையம் அருகேயுள்ள மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையின் பூட்டை உடைத்து ரூ.82 ஆயிரத்தையும் அதே மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். இதேபோல் அந்த பகுதியில் உள்ள தனியார் பால் விற்பனை கடையில் இருந்த ரூ.1,500 மற்றும் செல்போன், வடக்கு ராஜவீதியில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை கடையில் இருந்த ரூ.1,500 ஆகியவற்றையும் திருடிச்சென்றனர்.

பின்னர் நேற்று காலை கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள், கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சிவகங்கை டவுன் போலீசார் சம்பவம் நடந்த கடைகளுக்கு வந்து சோதனை செய்தனர். பின்னர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்தபோது 5 கடைகளிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களே பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முகம் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை திருடர்கள் குல்லா அணிந்து மறைத்துள்ளனர். இதனையடுத்து திருட்டு சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அடுத்தடுத்த வீடுகள், கடைகளில் பணம்-நகை திருடப்பட்டது. இதேபோன்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் நகரில் அடுத்தடுத்த கடைகளில் பணம் மற்றும் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

இந்தநிலையில் தற்போது சிவகங்கையில் 5 கடைகளில் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் யாரையும் இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களால் கடை வியாபாரிகள் பீதியில் உள்ளனர். 

Next Story