மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்


மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:30 AM IST (Updated: 17 Feb 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயனீட்டாளர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

சிவகங்கை,

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை 793 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 167 களப்பணியாளர்கள் உள்பட 258 பேர் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நேற்று மின்வாரிய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பயனீட்டாளர்கள் தவித்தனர். காரைக்குடியில் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் கடந்த 2 தினங்களாகவே இணையதள சர்வர் பிரச்சினை இருந்துவந்தது. இதற்கிடையில் நேற்று மின்வாரிய ஊழியர் வேலை நிறுத்தம் செய்ததால் ஏற்கனவே கட்டணம் செலுத்தாமல் இருந்த பயனீட்டாளர்கள் நேற்றும் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் மின் கட்டணம் செலுத்த சென்றாலும், மின்வாரிய அலுவலகத்தில் இணையதளம் வேலை செய்தால் தான் இங்கு கட்டணம் செலுத்த முடியும் என்று கூறினர். இதனால் குறிப்பிட்ட தேதியில் பயனீட்டாளர்கள் மின் கட்டணம் செலுத்த வில்லை என்பதால் அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

Next Story