திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பனியன் தொழில் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பனியன் தொழில் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2018 4:15 AM IST (Updated: 17 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பனியன் தொழில் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூர்,

மத்திய அரசு நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது. இதனால் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்தது. மேலும், டியூட்டி டிராபேக் உள்ளிட்ட சலுகை சதவீதங்கள் குறைப்பு உள்ளிட்டவைகளால், திருப்பூர் பனியன் வர்த்தகம் சரிவை சந்தித்து வருகிறது. மேலும், மத்திய அரசு இ-வே பில் முறையையும் நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் திருப்பூர் தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் பனியன் தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.

இந்த கூட்டத்தில் சரிவடைந்து வரும் பனியன் தொழிலை எவ்வாறு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது, இந்த பிரச்சினைகள் குறித்து மத்திய அரசிடம் தெரிவிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில் தொடங்க வருமாறு தொழில்துறையினருக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தொழில் தொடங்கினால் சிறப்பாக செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், டீமா சங்கத்தை சேர்ந்த செந்தில், சைமா சங்கத்தை சேர்ந்த பொன்னுசாமி, நிட்மா சங்கத்தை சேர்ந்த அகில்மணி, சிஸ்மா சங்கத்தை சேர்ந்த பாபுஜி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகளும் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். 

Next Story