பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் சாவு: மாநகராட்சி உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது


பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் சாவு: மாநகராட்சி உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2018 3:15 AM IST (Updated: 17 Feb 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

3 பேர் சாவு

பெங்களூரு சர்ஜாபுரா ரோடு, கசவனஹள்ளியில் ரபீக் என்பவருக்கு சொந்தமான 5 மாடிகளை கொண்ட கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தை வணிக வளாகமாக மாற்றும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் நடந்த கட்டுமான பணியின் போது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி முதலில் 4 தொழிலாளர்கள் உயிர் இழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் மட்டுமே உயிர் இழந்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

பலியான தொழிலாளர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சேக் அகமது, அன்வர் அன்சாரி, ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரகு என்று தெரியவந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 14 பேர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 5 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

மேலும் ஒரு தொழிலாளி சாவு

இதையடுத்து, அந்த தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்றும் நடைபெற்றது. இந்த பணியில் தீயணைப்பு படைவீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டார்கள். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் கஜரத், சதானந்த், மஞ்சுநாத் ஆகிய 3 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் தொழிலாளி கஜரத் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்ற தொழிலாளர்களுக்கும் உயிருக்கு போராடி வருகிறார்கள். கட்டிட இடிபாடுகளுக்குள் ஓரிரு தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி நேற்று இரவு நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. மேலும் மோப்ப நாய்கள் மூலம் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா? என்று தேடும் பணியும் நடந்தது. இன்றும் (சனிக்கிழமை) இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 பேர் கைது

இதற்கிடையில், கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக, அதன் உரிமையாளரான ரபீக்கின் மனைவியான சமீராவையும், மாநகராட்சி உதவி என்ஜினீயரான முனிரெட்டியையும் பெல்லந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரபீக், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடிவருகிறார்கள். பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story