அறிவியல் படைப்பாற்றலை ஊக்குவிக்க 500 அரசு பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைக்கப்படும் - கே.ஏ.செங்கோட்டையன்


அறிவியல் படைப்பாற்றலை ஊக்குவிக்க 500 அரசு பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைக்கப்படும் - கே.ஏ.செங்கோட்டையன்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:45 AM IST (Updated: 17 Feb 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

அறிவியல் படைப்பாற்றலை ஊக்குவிக்க 500 அரசு பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அடல் ஆக்கத்திறன் உயர்தர ஆய்வகம் திறப்பு விழா, உலகத்தமிழ் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் விழா, சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி சாந்தி வரவேற்றார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் முன்னிலை வகித்தார். ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அடல் ஆக்கத்திறன் உயர்தர ஆய்வகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது:-

பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9,10-ம் வகுப்புகளுக்கும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் என புதிய சீருடைகள் உருவாக்க உள்ளோம். உயர்நிலை பள்ளி படிக்கும் மாணவர்கள் மேல்நிலைப்பள்ளியில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என்பதை பெற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

286 பாடத்திட்டங்கள் இருப்பதை தெரிவிக்கும் வகையில் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டு ஒவ்வொரு பள்ளிகளில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 593 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படித்த சுமார் 8 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருக்கிறார்கள். வரும் ஆண்டில் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படு கிறது. இந்த பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையும் மிஞ்சும் அளவுக்கு அமைக்கப்படும்.

10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலமாக 72 பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி. பிளஸ்-2 முடித்தால் வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதம் என்ற கல்வியை வழங்க முடியும். மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புக்கு 72 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். பொதுத்தேர்வு முடிந்ததும் மடிக்கணினி அந்தந்த மாணவர்களின் கையில் ஒப்படைக்கப்படும்.

மேலும் பயிற்சியில் தேர்வு வைத்து 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 8 கல்லூரிகளில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 8 கல்லூரிகளில் பயிற்சி அளிக்கும்போது அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்டவற்றை அரசு செய்து தரும். 25 நாட்கள் அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற பின் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் இவர்கள் எதிர்கொள்ள முடியும். ரூ.20 லட்சம் செலவில் அடல் ஆக்கத்திறன் உயர்தர ஆய்வகம் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 500 அரசு பள்ளிகளில் இந்த ஆய்வகம் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆய்வகம் மூலமாக மாணவர்களுக்கு அறிவியல் படைப்பாற்றலை ஊக்குவிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story