மதுரை டிரைவரை கட்டிப்போட்டு காரை கடத்திய 2 பேர் கைது


மதுரை டிரைவரை கட்டிப்போட்டு காரை கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2018 3:33 AM IST (Updated: 17 Feb 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரை டிரைவரை கட்டிப்போட்டு காரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பட்டி,

மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 11-ந் தேதியன்று அவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர், சேலத்துக்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று அழைத்துள்ளனர். அவர்கள் கூறிய இடத்துக்கு கணேசன் சென்ற போது, அங்கு 4 பேர் காரில் ஏறியுள்ளனர். அவர்களை ஏற்றிக்கொண்டு கணேசன் காரை சேலம் நோக்கி ஓட்டியுள்ளார்.

நள்ளிரவில் கார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது அவர்கள், சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், காரை சாலையோரம் நிறுத்தும்படியும் கணேசனிடம் கூறியுள்ளனர். இதனால் அவரும் காரை சாலையோரத்தில் நிறுத்தினார். அப்போது டிரைவரை காருக்குள் தள்ளிவிட்டு, அவருடைய கை, கால்களை கட்டிப்போட்டு காரை கடத்தி சென்றனர்.

பின்னர் அவரை செம்பட்டி-சின்னாளபட்டி ரோட்டில் உள்ள ஜே.புதுக்கோட்டை என்ற இடத்தில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு காருடன் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். அப்போது கணேசனிடம் இருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் பணம் ஆகியவற்றையும் பறித்து சென்றனர்.

இதுகுறித்து தனி போலீஸ் படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். கணேசனின் செல்போன் எண்ணை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அப்போது அந்த கார் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு வருவது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் பழனி அருகே அந்த காரை மடக்கிப்பிடித்தனர். ஆனால் காரில் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து காரை மீட்ட போலீசார், அந்த 2 பேரையும் பிடித்து செம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (34), பட்டுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story