புதிய குப்பை கிடங்கு அமைக்க நிலம் ஒதுக்குவது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்


புதிய குப்பை கிடங்கு அமைக்க நிலம் ஒதுக்குவது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:45 AM IST (Updated: 17 Feb 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புதிய குப்பை கிடங்கு அமைக்க நிலம் ஒதுக்குவது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்க மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் புதிய குப்பை கிடங்கு அமைக்க நிலம் ஒதுக்குவது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்க மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தாமதம்


மும்பை தியோனார் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொள்ளளவை தாண்டி அதிகமாக குப்பை கொட்டப்பட்டு வருவதாகவும், அதனை நிறுத்த உத்தரவிடுமாறும் மும்பை ஐகோர்ட்டில் ஏராளமான பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு புதிய குப்பை கிடங்கு அமைக்குமாறு மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து புதிய குப்பை கிடங்கு அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கி தருமாறு மாநகராட்சி, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இருப்பினும் இதற்கு இடம் ஒதுக்காமல் மாநில அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

இந்தநிலையில் இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் ஓகா மற்றும் தேஷ்முக் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு விளக்கம்

அப்போது இதுகுறித்து விளக்கம் அளித்த மாநில அரசு வக்கீல்கள் “தலோஜாவில், குப்பை கிடங்கு அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த வழியாக கியாஸ் பைப்புகள் பதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி மாநகராட்சி தட்டிக்கழித்துவிட்டது. தற்போது முல்லுண்ட் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலம் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், “குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சிக்கு தேவையான நிலத்தை வழங்குவதில் மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது. கோர்ட்டு உத்தரவை மீறி இத்தகைய தாமதம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பிரச்சினையால் மும்பை மாநகராட்சி சந்திக்கும் சுகாதார சீர்கேட்டின் தீவிரத்தை மாநில அரசு புரிந்துகொள்ளும் என நினைக்கிறோம்.

மாநில அரசு எந்த இடத்தில் புதிய குப்பை கிடங்கு அமைக்க இடம் ஒதுக்க உள்ளது என்பது குறித்து 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரம் மூலம் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story