பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்


பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:37 AM IST (Updated: 17 Feb 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி கலெக்டர் ரஞ்சித், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர், டி.ஆர்.ஓ. குணாளன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்க வங்கியில் கடனுதவி வழங்க வேண்டும். டி.கல்லுப்பட்டியில் சிறுதானிய கிடங்கு அமைக்க வேண்டும். வைகை அணையில் இருந்து உசிலம்பட்டிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய் கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்டூர் பகுதி விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப் படாமல் உள்ள பயிர்க் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மானாவாரி பருத்தி விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்க வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும்.

பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையான வைகை அணையை தூர்வாரி அதன்மூலம் வரும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மேட்டுப்பட்டி பகுதியில் 125 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டன. அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பனையூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய கலெக்டர் வீரராகவராவ், “மதுரை மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கருகிய நெற்பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்தப்படும். உசிலம்பட்டி பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார். 

Next Story