பக்கத்து வீட்டு மாடியில் இருந்து இரும்பு கம்பி தலையில் விழுந்து அ.தி.மு.க. பிரமுகர் சாவு


பக்கத்து வீட்டு மாடியில் இருந்து இரும்பு கம்பி தலையில் விழுந்து அ.தி.மு.க. பிரமுகர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2018 4:15 AM IST (Updated: 18 Feb 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கட்டுமானப்பணி நடைபெறும் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து இரும்பு கம்பி தலையில் விழுந்ததில், அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ஜானகியம்மாள் எஸ்டேட் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது45). இவர் திருவொற்றியூர் பகுதி 11-வது வார்டு அ.தி.மு.க. பொருளாளராக பதவி வகித்து வந்தார். கண்ணனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், வஸ்தா (8) என்ற மகளும், சபரி (7) என்ற மகனும் உள்ளனர்.

கண்ணனின் வீடு அருகே மாதவன் என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டின் 2-வது மாடியில் புதிதாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று வெளியே சென்றிருந்த கண்ணன், மதியம் சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் மாதவன் வீடு அருகே சென்ற போது, கட்டுமான பணிக்காக மேலே கொண்டு செல்லப்பட்ட இரும்பு கம்பி ஒன்று திடீரென தவறி கண்ணன் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் கம்பி குத்தி கிழித்தது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கண்ணனை அப்பகுதியில் உள்ளவர்கள் தூக்கி அவரது தலையில் இருந்து கம்பியை அகற்றினர். பலத்த காயமடைந்த அவரை பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மாதவன் மற்றும் கட்டிட மேஸ்திரி மோகன் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story