நெற்பயிர்களை காப்பாற்ற டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


நெற்பயிர்களை காப்பாற்ற டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:00 AM IST (Updated: 18 Feb 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

கருகும் நிலையில் உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

தமிழகத்திற்கு, கர்நாடகா அரசு உரிய தண்ணீர் வழங்கவில்லை. போதிய மழை இல்லாமல் இயற்கையும் சதி செய்து விட்டது. சம்பா, குறுவை, தாளடி என மூன்று போக விளைச்சலினால் செழிப்பாக வாழ்ந்த விவசாயிகள் இன்று ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகின. மீண்டும் பயிர் செய்தபோது வெட்டுக்கிளிகள் தாக்குதலில் பயிர்கள் நாசமாயின. 3-வது முறையாக பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுகின்றன. இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல், பாண்டிரோடு, வடபாதி, தென்பாதி, பிச்சன்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

கட்டிமேடு பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதை கண்ட விவசாயிகள், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சி நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் குளத்தில் உள்ள தண்ணீரும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். இதனால் டேங்கர் லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வரமுடியாது. தண்ணீருக்கு என்ன செய்வது? என்று விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். எனவே அரசு கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story