வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
x
தினத்தந்தி 18 Feb 2018 3:45 AM IST (Updated: 18 Feb 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்,

ஆம்பூர் தாலுகா சின்னகரும்பூரை சேர்ந்த ஜெயசீலன், வேலூர் போலீஸ் சூப்பிரண்டிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை செய்த பேரணாம்பட்டை சேர்ந்த அப்ரோஸ் அகமது என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

அதனை நம்பி நான் கடன் வாங்கி ரூ.4 லட்சமும், தொடர்ந்து சில நாட்களில் எனது அக்காள் மற்றும் அவளது மகன் ஆகியோருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும்படி ரூ.8 லட்சத்து 25 ஆயிரமும் கொடுத்தேன். அப்போது அப்ரோஸ் அகமது, வெளிநாட்டில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிய மேலும் பலர் தேவைப்படுவதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து எனது நண்பர்கள், உறவினர்கள் என 27 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.6½ லட்சம் என ரூ.1 கோடியை அப்ரோஸ் அகமதுவிடம் கொடுத்தேன்.

அதன் பின்னர் சில நாட்களில் வெளிநாடு செல்வதற்காக மருத்துவ பரிசோதனை மற்றும் பாஸ்போர்ட்டு எடுப்பதற்காக அனைவரையும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றார். ஆனால் இன்று வரை ஒருவரைகூட வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை. கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் திடீரென அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டார். கடந்த சில மாதங்களாக அவரை பல்வேறு இடங்களில் நான் தேடி வந்தேன்.

பேரணாம்பட்டிலேயே வேறு பகுதியில் அவர் வசித்து வருவது தற்போது தான் தெரியவந்தது. என்னிடம் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிகவும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதனால் மிகுந்த மனஉளைச்சலில் வாழ்ந்து வருகிறேன்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.1 கோடி பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்த அப்ரோஸ் அகமது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story