திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்கிய காளையர்கள்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்கிய காளையர்கள்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில், காளைகளை போட்டிப் போட்டு காளையர்கள் அடக்கினர். காளைகள் முட்டியதில் 24 பேர் காயம் அடைந்தனர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துஆவரம்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக வாடிவாசல், பார்வையாளர்கள் இருக்கை (கேலரி) அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இதையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 9.15 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மேற்கு தாசில்தார் மிருணாளினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாடுபிடிவீரர்களும், காளைகளும் அடிபடாமல் இருப்பதற்காக மைதானம் முழுவதும் தேங்காய் நார் பரப்பப்பட்டு இருந்தது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

மதுரை, திருச்சி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டத்தின் கொசவபட்டி, உலகம்பட்டி, மறவப்பட்டி, வக்கம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, காமாட்சிபுரம், தவசிமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன.

காளைகளை அடக்குவதற்கு 660 பேர் பதிவு செய்தனர். இதில் 600 பேர் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளிக் குதித்து சென்றன.

சில காளைகளின் பெயர்களை அறிவித்தவுடன் மாடுபிடி வீரர்கள் கேலரியில் ஏறி தொற்றிக்கொண்டனர். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகள் வாரி வழங்கப்பட்டன. இதனால் வீரர்கள் சளைக்காமல் காளைகளுடன் மல்லுக்கட்டினர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, சைக்கிள், கட்டில், குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள், வெள்ளிநாணயம் மற்றும் ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கப்பட்டன. விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 24 பேர் காயம் அடைந்தனர்.

வட்டார மருத்துவ அதிகாரி மாலாமந்ரேஸ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த மயிலாப்பூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 40) மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story