ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள கசிவுநீர் குட்டையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன


ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள கசிவுநீர் குட்டையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன
x
தினத்தந்தி 18 Feb 2018 3:20 AM IST (Updated: 18 Feb 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள கசிவுநீர் குட்டையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

ஈரோடு,

ஈரோடு வேப்பம்பாளையத்தில் மஞ்சியாத்தாள் -நல்லாத்தாள் கோவிலை ஒட்டி 1½ ஏக்கர் பரப்பளவில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர் குட்டை உள்ளது. கடந்த சில மாதங்களாக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த குட்டையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

மேலும் வேப்பம்பாளையத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீரும் இந்த குட்டையில் தான் கலக்கிறது. கடந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்ட போதும் கூட இந்த கசிவுநீர் குட்டையில் தண்ணீர் வற்றாமல் கிடந்தது. இதன் காரணமாக இங்கு ஏராளமான மீன்கள் இருந்தன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த குட்டையில் கிடந்த மீன்கள் ஒவ்வொன்றாக செத்து மிதந்தன. நேற்று காலை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த குட்டையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில மீன்கள் செத்து மிதந்தன. அதனால் நாங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இன்று (நேற்று) ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதில் ஜிலேபி மீன்களே அதிகம். இதனால் இந்த வழியாக செல்லும் போது அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்தபடி தான் செல்ல வேண்டி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இங்கு வந்து மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் கசிவுநீர் குட்டையில் விஷம் கலக்கப்பட்டு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி இந்த கசிவுநீர் குட்டையை அரசு செலவில் தூர்வாருவதோடு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டையில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story