திருடன் என்று நினைத்து வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி


திருடன் என்று நினைத்து வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 18 Feb 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அசோகபுரம் பகுதியில் திருடன் என்று நினைத்து வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு அசோகபுரம் 16 ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் நுழைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எதுவும் பேசாமல் இருந்தார். இதனால் அவர் திருடனாக இருப்பார் என்று சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவருடைய கைகளை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, கடந்த 2 நாட்களாக அந்த வாலிபர் சுற்றி திரிவதாகவும், வீட்டில் அத்துமீறி நுழைந்து விடுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை போலீசார் மீட்டு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் அதே வாலிபர் ஈரோடு பட்டேல் வீதிக்கு நேற்று இரவு சென்றார். அங்கும் அவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அவரை தாக்கி உள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story