கவர்னருடன் சுமுக உறவு வைத்திருக்கவே விரும்புகிறோம் - அமைச்சர் கந்தசாமி பேட்டி


கவர்னருடன் சுமுக உறவு வைத்திருக்கவே விரும்புகிறோம் - அமைச்சர் கந்தசாமி பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2018 3:54 AM IST (Updated: 18 Feb 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசுக்கும் கவர்னருக்கும் சுமுக உறவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் கவர்னருடன் சுமுக உறவு வைத்திருக்கவே விரும்புகிறோம் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு வசதியாக புதுவை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்கள் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை துறைமுகம் முன்வந்துள்ளது. இதற்காக புதுவை அரசுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன் அடிப்படையில் சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக இது செயல்பட உள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய அரசின் நிறுவனம் மற்றும் காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் மூலமாக புதுச்சேரி துறைமுக பகுதியை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்தது. இந்தநிலையில் துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி வரும் மிதவை கப்பல் (பார்ஜி) வருவது தொடர்பான வெள்ளோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வெள்ளோட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதை யொட்டி அமைச்சர் கந்தசாமி நேற்று காலை துறைமுக வளாகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் ஏன் இன்னும் துறைமுகத்தை தூர்வாருவது, ஆழப்படுத்துவது போன்ற பணிகளை முடிக்கவில்லை எனக் கேட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அப்போது தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் மற்றும் துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்னும் இரண்டொரு நாட்களில் புதுச்சேரி துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் சரக்குகள் ஏற்றி, இறக்குவதற்கான வெள்ளோட்டம் நடைபெறும். கப்பலில் கொண்டுவரப்படும் சரக்குகளை கரைக்கு எடுத்துவரும் பார்ஜி வந்து செல்லும் வகையில் ஆழப்படுத்தும் பணி செய்யப்பட்டுவிட்டதா? என்பதை ஆய்வு செய்ய வந்தேன்.

புதுவை வர உள்ள பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். ஆனால் இதுவரை அதற்கான அனுமதி கடிதம் நமக்கு வரவில்லை. அனுமதி கிடைத்தால் பிரதமரின் கையால் இந்த திட்டம்தொடங்கி வைக்கப்படும். இங்கு படகுகளை நிறுத்தி வைத்து இருக்கும் மீனவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரப்படும். அதற்கு மீனவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தற்போது அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமூக உறவு ஏற்பட்டதை தொடர்ந்து இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. கவர்னருடன் தொடர்ந்து சுமூக உறவு வைத்திருக்கவே விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியினர் பதவி கேட்பது குறித்து கட்சித் தலைவர் நமச்சிவாயம் தான் பதில் அளிக்க வேண்டும், இது அனைத்து கட்சியிலும் உள்ள விஷயம்தான்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story