நலத்திட்டங்கள் வழங்குவதில் அரசு மீது அதிருப்தி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜினாமா, நாராயணசாமி சமரசம்


நலத்திட்டங்கள் வழங்குவதில் அரசு மீது அதிருப்தி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜினாமா, நாராயணசாமி சமரசம்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 18 Feb 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் அரசு மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் கட்சிப் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி சமரசம் செய்து வைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் 2011, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், இடைத்தேர்தலிலும் போட்டியிட்ட கட்சியின் பொது செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தோல்வி அடைந்தார்.

சட்டமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது கட்சிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி, கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் அறிவித்து இருந்தனர். இந்திராநகர் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகத்திற்கு நியமன எம்.எல்.ஏ. அல்லது வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து அவரும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீடு கட்டுவதற்கான மானிய உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏ.கே.டி. ஆறுமுகம் வழங்கினார். இதில் தேர்வு செய்யப்பட்ட தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தொகுதி எம்.எல்.ஏ.வான ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது.

இதனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி செயலாளரும், கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.ஜெ. ஜெயபால் பயனாளிகளுக்கு வழங்கினார். இதனால் ஏ.கே.டி. ஆறுமுகம் கடும் அதிருப்தி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து கட்சியை விட்டு விலக முடிவு செய்தனர்.

இது பற்றி அறிந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை ஏ.கே.டி. ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து பேசி, சமாதானம் செய்தார். அப்போது ஏ.கே.டி. ஆறுமுகம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்க மறுத்து விட்டார். பின்னர் அரசின் நலத்திட்ட உதவிகளை ரங்கசாமி மூலமாக இல்லாமல், அதிகாரிகள் மூலமே கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து ராஜினாமா மற்றும் கட்சியை விட்டு விலகும் முடிவை காங்கிரசார் கைவிட்டனர்.

இது குறித்து ஏ.கே.டி. ஆறுமுகம் கூறியதாவது:-

என்னிடம் அரசின் நலத்திட்ட உதவிகளை கேட்டவர்களுக்கு விண்ணப்பங்களை பெற்றுக் கொடுத்தேன். ஆனால் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பட்டியலை தொகுதி எம்.எல்.ஏ.வான ரங்கசாமியிடம் அதிகாரிகள் கொடுத்து விட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள் ரகசிய உறவு வைத்துள்ளனர். இது குறித்து வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் எப்படி ரங்கசாமி வீட்டிற்குச் சென்று நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து கட்சியினர் கேள்வி எழுப்பினர். எனவே அதிகாரிகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தனர். முதல்-அமைச்சர் எங்களை சமாதானம் செய்து, 10 நாட்களுக்குள் அரசு அதிகாரிகள் மூலம் நலத்திட்ட உதவிகளை காங்கிரசாருக்கு வழங்குவதாக உறுதியளித்து உள்ளார். அவ்வாறு வழங்காவிட்டால் நானும் எனது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விவகாரத்தில் கட்சிப் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நிர்வாகிகள் அறிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story