காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி பிரதமருக்கு கடிதம், முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி பிரதமருக்கு கடிதம், முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2018 5:00 AM IST (Updated: 18 Feb 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலுக்கான 7 டி.எம்.சி. தண்ணீரை உறுதி செய்யும் வகையில் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட வேளாண் துறை சார்பில், காரைக்கால் நகராட்சித் திடலில் 18-வது மலர், காய், கனி கண்காட்சி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி ஆதிங்கப்பட்டு பகுதியில் விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக 50 ஏக்கரில் இருந்த இயற்கை விவசாயம் இன்று 500 ஏக்கர் என்ற அளவில் நடைபெறுகிறது. இது மாபெரும் வெற்றியாகும். அதுபோல் காரைக்கால் பகுதி விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டவேண்டும்.

குளிர் பிரதேசம், மலைப் பிரதேசத்தில் விளையும் முட்டைக்கோஸ், காலிபிளவர், கேரட், பீட்ரூட் போன்றவை புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இதுபோன்ற முயற்சிகளை காரைக்கால் விவசாயிகளும் மேற்கொள்ளவேண்டும். இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காகவே இதுபோன்ற கண்காட்சிகளை அரசு நடத்துகிறது.

ஐ.நா. அமைப்பான இக்ரிசாட் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு காரைக்காலில் மண்வள மேம்பாட்டு மையத்தை அமைக்க முன்வந்துள்ளது. மண் பரிசோதனை செய்து, எந்த பகுதியில் என்ன மாதிரியான பயிர் செய்யலாம் என அவர்கள் அறிவுறுத்துவார்கள். இந்த மையத்தை மாநில அரசு காரைக்காலில் அமைக்க, அடுத்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது. இது காரைக்கால் விவசாயிகளுக்கு நல்ல பயனைத் தரும்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் புதுச்சேரிக்கான 7 டி.எம்.சி. தண்ணீரை உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாகும். தமிழகத்தின் காவிரிநீர் அளவு குறைக்கப்பட்டாலும், புதுவைக்கான அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தநிலையில், காரைக்காலுக்கான 7 டி.எம்.சி. நீரை உறுதி செய்யும் வகையில் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும். இதனை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Next Story