தமிழ்ப் பெருங்கடல் உ.வே.சா.
நாளை (பிப்ரவரி 19) தமிழ் தாத்தா உ.வே.சா. பிறந்த தினம்.
தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். சங்கம் தழைக்கும் மதுரை என்றும் தமிழையே சங்கத்தமிழ் என்றும் புலவர்கள் பலர் மொழிந்துள்ளனர்.
அத்தகைய சங்க இலக்கியங்கள் காலம் காலமாக குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை எந்த நிலையில் இருந்தன என்றால் பனை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும், கட்டுக்கட்டாகக் கிடந்தன. அந்த எழுத்துக்களை இன்று படிப்பது அவ்வளவு எளிதில்லை. ஒரு நூலுக்கே இருபதுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தம்முள் வேறுபட்டு நிற்கும். அத்தகைய பனை ஓலை ஏடுகளைத் தேடித்தேடிக் கால்களும், கைகளும் சோர்ந்து விழக் கலங்கிப் புலம்பி இடர்ப்பட்டு இன்னலுற்று ஆண்டுக்கணக்கில் தேடிப் படித்து மூலபாடம் கண்டு அச்சில் வெளியிட்ட அளப்பரும் பெருமை உ.வே.சா.வுக்கே உரியது. அப்படிக் கடினமாக உழைத்து வெளியிட்ட இலக்கியச்செல்வங்கள் நமது பண்பாட்டுப் பேழைகளாகும்.
என் தந்தையார் உரைவேந்தர் அவ்வை துரைசாமி பிள்ளை எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஐங்குறுநூற்றுக்கு ஒரு புத்துரைப் பதிப்பை வெளியிடத் தொடங்கிய பொழுது எழுதிய வரிகளை நினைவுகூரலாம்.
“இவ்வரிய நூலை முதன் முதலில் அச்சேற்றிய பெருமை நம் தமிழன்னையின் தவப்புதல்வராய், தமிழராகிய நாம் முன்னோர் ஈட்டி நமக்கென வைத்த செந்தமிழ்ச் செல்வம் என வீறு கொண்டு பேசுதற்குரிய பெருந்துணை புரிந்தவராய் இதுபோலும் பண்டைச் செந்தமிழ்ப் பெருநூல் பலவற்றையும் அச்சிட்டுதவிய பெருந்தகையாய் விளங்கும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கட்குரியதாகும். இத்திருப்பணியில் ஈடுபட்டுச் செய்தருளியுள்ள தொண்டுகளை உண்மைத் தமிழ்மக்கள் ஒருபோதும் மறப்பதும் நினையார். அத்தகைய பெருமகனார், நாடிய செல்வமும், நீடியநாளும், சூடிய புகழும் உடையராய்த் தமிழன்னையின் சிறப்புடைய தலைமகனெனத் திகழுமாறு பரமன் திருவருள் பெருகுகவென அவன் திருவடிப் போதுகளை மனமொழி மெய்களால் வணங்குகின்றேன்”.
பழந்தமிழ் நூல் ஏடாக இருந்தால், அந்நூலுக்கான மூலப்படி என்று எதுவும் அமையாது. சில நூல்களுக்கு ஒரே ஒரு மூலப்படிதான் இருக்கும். அதுவும் ஏடு எழுதியோரால் பிழைகள் மலிந்து மூலத்தின் முகமே சிதைந்திருக்கும். ஒப்பு நோக்கப் பல படிகள் வேண்டும். அப்படியே கண்டெடுத்தாலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாது. ஒரே நூலைப் பற்றிய வேறுவேறு மூலப்படிகளும் தத்தம் அளவில் பாழ்பட்டிருக்கும். இத்தகைய சிக்கலான பின்னல்களில் உழன்று மூலபாடத்தைக் கண்டடைய நுணுக்கமான புலமை கைவரப்பெறவேண்டும்.
பனையோலை எழுத்துகளுக்குப் புள்ளி இராது. எல்லா எழுத்துகளும் ஒன்றேபோல் இரா. பல உரைநூல் சுவடிகளில் பாடலும் உரையும் தாள ஒழுங்கிலேயே எழுதப்பட்டிருக்கும். எங்கு உரை முடிந்து அடுத்தப் பாடல் எங்குத் தொடங்குவது என்பது திகைப்பூட்டும்.
இலக்கியப் புலமையும் இலக்கணச் செம்மையும் வாய்ந்தவர்களிடத்தில் பொருளும் உண்மைப் பாடமும் காணும் திறன் உருவாகும். பனையோலைப் படியைக் காகிதத்திற்கு (அச்சு) கொண்டுவருதல் அடுத்தவெற்றி. இத்தகைய அனைத்தறிவும் பெற்ற சான்றாண்மைக் கிழவராய் உ.வே.சா. தமிழின் பரப்பெங்கும் படர்ந்து நின்றார்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் 19-2-1855 அன்று வேங்கடசுப்பையருக்கும், சரசுவதி அம்மையாருக்கும் உ.வே.சா. மகனாகப் பிறந்தார்.
ஒல்லும் வகையெல்லாம் தமிழுக்கு ஓயாது உழைத்த உ.வே.சா. 28-4-1942 அன்று திருக்கழுக்குன்றத்தில் இவ்வுலக வாழ்வினின்றும் ஓய்வு பெற்றார். செந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்த அவரின் நினைவு நீங்காது நிற்க அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் அவரது முழு உருவச் சிலையை 1948-ல் அரசே நிறுவியது. தமிழறிஞர்க்கென்று நிறுவிய முதல்சிலை இதுவேயாகும்.
உற்றாரும் உறவினரும் இளஞ் சிறுவனை வடமொழி கற்கச் சொன்னார்கள். தந்தையார் இசையறிவு மிக்கவர் என்ற நிலையில் மகனை இசை பயிலச் சொன்னார். மகனோ விடாப் பிடியாக மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமே பணிந்து, பணிந்து பாடம் கற்றார். ஆசிரியர் இட்ட பெயர் தான் சாமிநாதன். தந்தையார் சூட்டிய பெயர் வேங்கடராமன். ஆசிரியர் அழைத்த பெயரே அவருக்கு நிலைத்தது. மகாவித்துவான் மறைவு வரை அவரிடமே இணைபிரியாது இருந்தவர் நம் தமிழ்க்கடல்.
1.2.1876-ல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்தபின், அப்பொழுது (திருவாவடுதுறை மடத்தின் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகர் நான்காண்டுக் காலம் இவருக்குத் தமிழ்க்கல்வி ஊட்டினார். பின்னர் தமிழறிஞர் சி.தியாகராச செட்டியாரின் உதவியால் 16.2.1880-ல் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். நன்றிமறவாத உ.வே.சா. தம் இல்லத்துக்குத் ‘தியாகராசர் விலாசம்’ எனப் பெயரிட்டார்.
பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் ஐந்து நூல்கள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களையும் பல்வகை சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.பத்துப்பாட்டு வரிசையில் குறிஞ்சிப்பாட்டு நூலில் காணும் 99 மலர்கள் குறித்து வரும் வரிகளில் மூன்று தொடர்கள் ஏட்டில் காணாது உ.வே.சா. பெரிதும் இடர்ப்பட்டார். அவ்வரிகள் இடம்பெற்ற ஏடு கிடைக்காதா என்று தேடினார். ஊர், ஊராய் வீடு வீடாய் ஏறி இறங்கினார்.ஏடு கண்ட பின்னர்தான் குறிஞ்சிப்பாட்டின் 99 மலர்கள் வரிசை நிறைவுபெற்றது.
புறநானூற்றுக்கு பழைய உரையைக் கண்டு வெளியிட்ட பெரும்புலமை வியத்தற்குரியது.உ.வே.சா. பழந்தமிழ்ச் சுவடிகளை அச்சிற் பதிப்பித்தார். அவருக்கு முன்னும் நூல்கள் அச்சிடப்பட்டன. எனினும் அவர்தம் பதிப்பு நூல்களில் காணப்பெறும் முகவுரை, மூலப்படிகளின் நிலை, சொற்பொருள் விளக்கம், மேற்கோள் விளக்கம், சொற்பொருள் விவரம், அரும்பொருள் அகராதி, கிடைத்தபடிகளின் நிரல்முறை, அச்சிட உதவியோர் விவரம் என எல்லாம் நிறைந்து உ.வே.சா பதிப்பு ஆய்வுப்பதிப்போடு அறிவு ததும்பும் பதிப்பு என்று அனைவரையும் போற்றச்செய்தது.
சிலப்பதிகாரத்தை 1889-ம் ஆண்டு வெளியிட்டார். அவ்வாறே மணிமேகலையை 1898-ல் வெளியிட்டார். உ.வே.சா. சைவ சமயச் சார்புடையவர் எனினும், சமண நூலான சீவகசிந்தாமணியையும், பெளத்த நூலான மணிமேகலையையும் பதிப்பித்தார். புராணம், பரணி, அந்தாதி, உலா, கோவை, தூது முதலான இலக்கிய நூல்களையும் இலக்கண நூல்களையும் பதிப்பித்தார். சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்த போதும் உ.வே.சா. மனம் சங்கத் தமிழின் பெருமிதத்தையே நாடியது. அவர் சங்க நூல்களை அச்சேற்றியபின் மருந்துக்குகூட ஒரு தகுதியான நூலை ஓலைச்சுவடிகளில் நாம் தேடமுடியவில்லை. ஓலைச்சுவடிகளில் போலிச் சுவடிகளே மிகுந்து பயனின்றி ஒழிந்தன. ஓலைகளை மீட்டுப் பதிப்பிக்கிறோம் என்பதெல்லாம் வெற்று முழக்கமே.
உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் எண்பதாண்டு விழாவில்தான் கல்கி “தமிழ்த் தாத்தா” என்ற புகழ்ப்பெயரை வழங்கினார். கல்கி வழங்கிய இந்தப் பட்டப் பெயரே நிலைத்து விட்டது. இது குறித்து கல்கி, உ.வே.சா.வுக்கு எழுதிய கடிதம் சுவையானது.
குறுந்தொகைக்கு உ.வே.சா. உரையெழுதிய பொழுது அவருக்கு வயது எண்பத்திரண்டு 1878-ம் ஆண்டில் தொடங்கிய இலக்கியப் பணி 1942 வரை வளர்ந்தது. தமிழ்க்கடல் உ.வே.சா. ஒரு பல்துறைக் களஞ்சியம், உரையாசிரியர், உரைநடை ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பேராசிரியர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் எனப்பல பாங்குகளில் தம் தலைமை மாட்சியை நிறுவியவர்.
டாக்டர் உ.வே.சா. எந்த நிலையிலும் தம் உள்ளம் உருகி எண்ணித்துதிக்கும் பாடல் வரிகளை நாம் எவரும் மறக்க இயலாது. தமது தளர்ந்த முதுமையிலும் மேடையில் மெல்ல எழுந்து நின்று
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்”
என்று அவையினர் விழிகளில் நீர் பெருக உரையாற்றினார் என்பர். தமிழ்விடு தூது நூலில் இடம்பெற்ற இத்தொடர்களையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். அண்ணல் காந்தியடிகளும் வங்கக் கவியரசர் தாகூரும் அகத்தியனே இவரென உ.வே.சா.வின் பெருமையைப் போற்றிப்பாராட்டினர்.
- அவ்வை நடராசன்

Related Tags :
Next Story