தேனி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்


தேனி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 19 Feb 2018 3:00 AM IST (Updated: 19 Feb 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே உள்ள வீரபாண்டி பாலார்பட்டியில் மாசி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

உப்புக்கோட்டை,

வீரபாண்டி அருகே பாலார்பட்டியில் உள்ள வீருசின்னம்மாள் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் முயல் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்டு, தேன்சிட்டு, நடுமாடு, பெரிய மாடு ஆகிய 8 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாட்டுக்கு 11 மைல் தூரமும், முயல் சிட்டு மாட்டுக்கு 1 மைல் தூரமும் பந்தயம்நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

பாலார்பட்டியில் இருந்து உப்புக்கோட்டை-தேவாரம் சாலை வழியாக பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பாலார்பட்டியில் இருந்து பெருமாள்கவுண்டன்பட்டி வரை 6 மைல் தூரம் சாலையின் இருபுறமும் நின்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். மாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு சென்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

முன்னதாக இந்த போட்டியை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியையொட்டி பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சின்னமனூர் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. விழா முடிவில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் மாட்டுவண்டிகளை ஓட்டியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியை சேர்ந்தவர்கள் மற்றும் பாலார்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story