மெயின் ரோட்டில் துவரை செடிகள் குவிப்பால் போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி


மெயின் ரோட்டில் துவரை செடிகள் குவிப்பால் போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 19 Feb 2018 2:15 AM IST (Updated: 19 Feb 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

மெயின் ரோட்டில் துவரை செடிகளை குவித்துள்ளதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் பகுதியில் நடப்பு ஆண்டில் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் அதிக அளவில் துவரை பயிர் செய்யப்பட்டு அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட துவரை செடிகளை கிராமத்தில் உள்ள களங்களில் போட்டு துவரை பயறுகளை பிரிக்காமல் மெயின் ரோட்டில் போட்டு பிரித்தெடுத்து வருகின்றனர்.

இதற்காக மெயின் ரோட்டில் துவரை செடிகளை மலை போல குவித்து வைத்து, அதை ரோடுகளில் பரப்பி வருகின்றனர். வாகனங்கள் செடியின் மீது ஏறி செல்லும் போது, செடியில் இருந்து பயறு தனியாக பிரிக்கப்படுகிறது. பின்பு அதை சுத்தம் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.

இதற்கான வேலை செய்யும் கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறும் விவசாயிகள், அவ்வாறு ஆட்கள் கிடைத்தாலும் அதிக அளவில் கூலி கேட்கப்படுகிறது என்கின்றனர். மேலும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயறை பிரிக்கும் வேலையில் ஈடுபடுவதால், துவரை செடிகளை ரோட்டில் குவித்து வைத்து, அதை ரோட்டில் பரப்பி, பிரித்து எடுத்து செல்வதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு ரோடுகளில் பரப்பப்படும் துவரை செடிகளின் மீது லாரி, பஸ் போன்ற பெரிய வாகனங்கள் சிரமமின்றி சென்று விடுகின்றன. ஆனால் கார், இருசக்கர வாகனங்கள் இந்த துவரை செடிகளின் மீது செல்லும் போது சிரமமடைந்து, விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பயறு பிரிக்கப்பட்ட பின்பு துவரை மார்களை ரோட்டின் ஓரமாக குவித்து வைத்து அதற்கு தீவைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறிப்போவதுடன், தீ பரவி அக்கம் பக்கம் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்டவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

Next Story