ஜல்லிக்கட்டு; 15 பேர் காயம் வெற்றி பெற்றவர்கள் பரிசு பொருட்களை அள்ளி சென்றனர்


ஜல்லிக்கட்டு; 15 பேர் காயம் வெற்றி பெற்றவர்கள் பரிசு பொருட்களை அள்ளி சென்றனர்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:15 AM IST (Updated: 19 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

நடுவலூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் பரிசு பொருட்களை அள்ளி சென்றனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள நடுவலூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தா.பழூர், திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் நைக்காப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் அருணாச்சலம் (வயது 20), கார்குடியை சேர்ந்த சத்தியமூர்த்தி (28), சின்னக்குடியை சேர்ந்த கனகராஜ் (28) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், நாற்காலிகள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தா.பழூர், திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், நாட்டாண்மைகள் மற்றும் நடுவலூர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story