மாசிப்பெருவிழாவையொட்டி விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


மாசிப்பெருவிழாவையொட்டி விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Feb 2018 3:00 AM IST (Updated: 19 Feb 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

மாசிப்பெருவிழாவையொட்டி விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் சந்தைதோப்பு அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் இரவு அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி அம்மன் குடல் பிடுங்கி மாலை அணிதல் நிகழ்ச்சியும், 14-ந் தேதி மயானகொள்ளை திருவிழாவும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பால்குட ஊர் வலம் மற்றும் செடல் திருவிழா நடந்தது. காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதையடுத்து மணிமுக்தா ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்தும், ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். அப்போது பக்தர்கள் அலகு குத்தியும், செடல் காவடி, பறக்கும் காவடி எடுத்தபடி கோவிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசிப்பெருவிழாவை முன்னிட்டு இன்று(திங்கட்கிழமை) ஊஞ்சல் உற்சவம் மற்றும் விளக்குப்பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story