பெருங்களத்தூரில் வாகனம் மோதி வாலிபர் பலி


பெருங்களத்தூரில் வாகனம் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Feb 2018 3:45 AM IST (Updated: 19 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெருங்களத்தூரில், மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

சென்னை தங்கசாலை பென்ஷனர்ஷ் லைன் பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருடைய மகன் பாலமுருகன்(வயது 28). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

பாலமுருகன், நேற்றுமுன்தினம் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலியான பாலமுருகனுக்கு கவிதா என்ற மனைவி உள்ளார்.

வண்டலூர் செந்தில் நகர், கபிலர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜ்(51). இவர் நேற்றுமுன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி சென்றார். பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற வேன் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வேனை ஓட்டி வந்த எருக்கஞ்சேரி, சிவகாமியம்மாள் நகரைச் சேர்ந்த டிரைவர் மதிவாணன்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த 2 விபத்துகள் தொடர்பாகவும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story