மயிலாப்பூரில் 10 கடைகளை உடைத்து கொள்ளையன் அட்டூழியம்


மயிலாப்பூரில் 10 கடைகளை உடைத்து கொள்ளையன் அட்டூழியம்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:00 AM IST (Updated: 19 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மயிலாப்பூரில் கொள்ளை ஆசாமி ஒருவர் இரும்பு கம்பியால் 10 கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அவரது உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் கோவில் அருகே பி.என்.கே.கார்டன் பகுதி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்தப் பகுதியில் கொள்ளை ஆசாமி ஒருவர் தன்னந்தனியாக இரும்பு கம்பியால் 10 கடைகளின் பூட்டை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.

மயிலை பேக்கரி என்ற கடையின் பூட்டை உடைத்து அங்கு கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மற்றும் விலை உயர்ந்த கைக்கெடிகாரம் ஆகியவற்றை திருடி உள்ளார். அங்குள்ள காய்கறி கடை, செல்போன் கடையிலும் புகுந்த கொள்ளையன் செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை எடுத்து உள்ளார்.

ரேஷன் கடையையும் அவர் விட்டுவைக்கவில்லை. ரேஷன் கடையின் பூட்டை உடைத்தும் ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துள்ளார். 5 கடைகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளார். மீதியுள்ள 5 கடைகளில் பூட்டை உடைத்து அவர் நுழைந்திருக்கிறார். ஆனால் அங்கு பொருட்கள் எதையும் திருடிச் செல்லவில்லை.

இந்த துணிச்சலான கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. கொள்ளை ஆசாமி தன்னந்தனியாக சென்று இரும்பு கம்பியால் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது.

கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள். 

Next Story