நடுக்கடலில் விசைப்படகில் மீனவர் மர்மச்சாவு


நடுக்கடலில் விசைப்படகில் மீனவர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 19 Feb 2018 4:30 AM IST (Updated: 19 Feb 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் விசைப்படகில் மீனவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி காசிமேட்டில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம்,

சென்னை காசிமேடு, சிங்காரவேலர் நகரைச்சேர்ந்தவர் ஏழுமலை(வயது 33). மீனவர். இவருடைய மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சின்ன கடலூர் துறைமுகம் பகுதியில் போயா என்னும் பகுதியில் கப்பல்கள், விசைப்படகுகள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஒப்பந்த வேலையை ராஜன் என்பவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

அவரிடம் விசைப்படகில் சென்று போயா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வேலையில் ஏழுமலை ஈடுபட்டு வந்தார்.

கடந்த 13-ந்தேதி பாதுகாப்பு பணிக் காக ராஜனுக்கு சொந்தமான விசைப்படகில் ஏழுமலை, விசைப்படகு டிரைவர் கணேசன்(59) ஆகியோர் சென்றனர்.

இந்தநிலையில் ஏழுமலை நடுக்கடலில் விசைப்படகில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நேற்றுமுன்தினம் ராஜனுக்கு டிரைவர் கணேசன் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஏழுமலையின் உடலுடன் அந்த விசைப்படகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு நேற்று வந்து சேர்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், மீனவர் ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஏழுமலை சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் இருப்பதால், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி நேற்று காசிமேடு, சூரிய நாராயணன் சாலையில் மீனவர் ஏழுமலையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், அவர் எப்படி இறந்தார் என தெரியவரும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனைவரையும் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து விசைப்படகு டிரைவர் கணேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம், “கடந்த 16-ந்தேதி விசைப்படகில் யாரோ சீட்டு விளையாடுவதாக கூறி ஏழுமலை கீழே இறங்கி சென்றார். படகில் 2 பேர்தானே உள்ளோம் என்றேன். ஆனால், 17-ந் தேதி விசைப்படகின் கீழே ஏழுமலை தூக்கில் பிணமாக தொங்கினார்” என்று கூறியதாக தெரிகிறது.

விசைப்படகில் கணேசன், ஏழுமலை மட்டும் இருந்த நிலையில் 3-வது நபர் யாராவது விசைப்படகில் இருந்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story