அ.தி.மு.க. கொடி, கரை வேட்டியை பயன்படுத்த தினகரன் அணிக்கு என்ன உரிமை இருக்கிறது, அமைச்சர் மணிகண்டன் கேள்வி


அ.தி.மு.க. கொடி, கரை வேட்டியை பயன்படுத்த தினகரன் அணிக்கு என்ன உரிமை இருக்கிறது, அமைச்சர் மணிகண்டன் கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2018 4:15 AM IST (Updated: 19 Feb 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் கரை வேட்டியை பயன்படுத்த தினகரன் அணியினருக்கு என்ன உரிமை இருக்கிறது என அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பெருங்குளம் ஊராட்சி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ராமநாதபுரம் முன்னாள் யூனியன் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாம்பன் முத்தாண்டி, ராமநாதபுரம் முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், பி.கே.சந்திரன், வக்கீல் கருணாமூர்த்தி, சாமிநாதன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆரிபுராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அனைவரையும் ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:- நான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட என்னை அடையாளம் கண்டு வாய்ப்பு வழங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. யாருடைய சிபாரிசிலும் சட்டமன்ற உறுப்பினருக்கான சீட் பெறவில்லை. எனக்கு சீட் வழங்கி அமைச்சராக அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அதனால் தான் அவர், வளர்த்த அ.தி.மு.க.வுக்கும் என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய தொகுதி மக்களுக்கும் எனது பணியை தொய்வின்றி செய்து வருகிறேன். மண்டபம் ஒன்றியத்தில் எனக்கு 30,000 வாக்குகள் அதிகமாக கிடைத்தது. இதில் பெருங்குளம் ஊராட்சியை சேர்ந்தவர் 100 சதவீதம் எனக்கு வாக்களித்தனர்.

பெருங்குளம் மக்களுக்கு நீண்டகாலமாக நல்ல குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக அறிந்தேன். அதனை தொடர்ந்து மண்டபம் ஒன்றியத்தில் முதன் முதலாக ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் செலவில் உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததில் உடனடியாக சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு தற்காலிகமாக பெருங்குளத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். இதேபோல மண்டபம் யூனியனில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தினகரன் அணியினர் பிள்ளை பிடிப்பது போல மாவட்டம் முழுவதும் சென்று கூவிக்கூவி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தினகரன் அணியினருக்கு அ.தி.மு.க.வின் பெயர், கரைவேட்டி மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்த என்ன உரிமை இருக்கிறது? அதனை அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தான் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பெருங்குளம் அ.தி.மு.க. பிரமுகர் அழகர்சாமி, நாகாச்சி நாகநாதன், மாணவரணி காளிதாஸ், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் செந்தில்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம், நகர் இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், நகர் ஜெயலலிதா பேரவை முத்துப்பாண்டி, 19-வது வார்டு செயலாளர் ஆதில் அமின், பாலசுப்பிரமணியன் மற்றும் பெருங்குளம் பகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஜானகிராமன் நன்றி கூறினார். 

Next Story