சாயல்குடி அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை


சாயல்குடி அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை
x
தினத்தந்தி 19 Feb 2018 5:00 AM IST (Updated: 19 Feb 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிரபல ரவுடி தலையை துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடலை வயலிலும் தலையை பஸ்நிறுத்தத்திலும் வீசி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நோம்பகுளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி என்பவருடைய மகன் மணி என்ற மணிகண்டன்(வயது 28). பிரபல ரவுடி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே மதுரை காமராஜர்புரம் பகுதிக்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார். தொடர்ந்து கஞ்சா வியாபாரம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர் மீது சாயல்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் அவருடைய தாய் மாரியம்மாள் வசித்து வந்ததால் அடிக்கடி தாயை பார்க்க மணிகண்டன் வந்து சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாயாரை பார்க்க மணிகண்டன் சாயல்குடி வந்துள்ளார். வீட்டில் சாப்பிட்டு விட்டு இருந்தபோது மாலையில் அவருடைய நண்பர்கள் என்ற பெயரில் 3 பேர் காரில் வந்துள்ளனர். அவர்களுடன் சிரித்து பேசியபடி காரில் ஏறி மணிகண்டன் சென்றுள்ளார்.

நேற்று காலை சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு வயல்காட்டில் தலை துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் வீசப்பட்டு கிடந்தது. தலையை காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த சாயல்குடி போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். மணிகண்டனின் தலை என்ன ஆனது? என்பது குறித்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது கமுதி அருகே அரியமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடையில் மணிகண்டனின் தலை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று தலையை கைப்பற்றினர். மணிகண்டனின் தலை மற்றும் உடல் கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட மணிகண்டனை நண்பர்கள் காரில் அழைத்து சென்று இருப்பதால் யாரோ முன்விரோதத்தால் திட்டமிட்டு அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முகத்தில் பல வெட்டுக்கள் இருப்பதால் கொலைவெறி தீர வெட்டி அதன்பின்னர் தலையை வெட்டி துண்டித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மணிகண்டன் சாயல்குடிக்கு வந்துள்ள தகவல் அறிந்த நபர்கள் தான் சரியான தருணத்தில் வந்து இந்த கொலையை செய்துள்ளனர்.

மதுரையில் நீண்டகாலமாக தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அங்கு நடைபெற்ற பழைய சம்பவத்திற்கு பழிக்குபழி வாங்குவதற்காக நண்பர்களை வளைத்துபோட்டு மணிகண்டனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சாயல்குடி பகுதியில் இருந்து அழைத்து வந்து இருவேலி பகுதியில் கொலை செய்து வயல்காட்டில் வீசிவிட்டு தலையை மட்டும் எடுத்துச்சென்று கமுதி அருகே அரியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதால் அதனை தாண்டி கொலையாளிகள் சென்றிருக்கலாம் என்று கருதி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story